உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைக் கோடரியால் வெட்டிக்கொலை செய்த கணவன், பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாந்தா மாவட்டத்தைச் சேர்ந்த முபீன் ஷேக் (48) என்பவருக்கும், அவரது மனைவி சர்பியா (52) என்பவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. சர்பியாவின் நடத்தையில் முபீனுக்குச் சந்தேகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த முபீன் தனது மனைவியைக் கோடரியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த கோரத் தாக்குதலில் சர்பியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

கொலைச் சம்பவத்திற்குப் பிறகு முபீன் தலைமறைவானார். உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிய போலீசார், முபீனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இது தொடர்பாக அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை ஒரு மரத்தில் முபீன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மூத்த போலீஸ் அதிகாரிகள், முபீனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, போலீசாருக்குப் பயந்து கணவனும் தற்கொலை செய்துகொண்டது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.