டெல்லியின் தென்கிழக்கு பகுதியான அமர் காலனியில், ஐஆர்எஸ் அதிகாரியின் 22 வயது மகள் வீட்டில் மயங்கிய நிலையில் கிடப்பதாகப் பெற்றோர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், அந்த வீட்டில் வேலை செய்த ராகுல் மீனா என்பவர் தான் இந்தக் கொடூரத்தைச் செய்தது சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமானது.
காலையில் பெற்றோர் ஜிம் மற்றும் வாக்கிங் சென்ற நேரத்தைத் துல்லியமாகக் கணித்த ராகுல், காலை 6:39 மணிக்கு வீட்டிற்குள் நுழைந்து, சரியாக 41 நிமிடங்கள் கழித்து 7:20 மணிக்கு வெளியேறியுள்ளான். வீட்டின் சாவி ஷூ ரேக்கில் வைக்கப்பட்டிருக்கும் என்ற ரகசியம் தெரிந்தே அவன் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளான்.
விசாரணையில் மற்றொரு அதிர வைக்கும் தகவல் கிடைத்துள்ளது. இந்தக் கொலைக்கு முந்தைய நாள் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராகுல் தேடப்பட்டு வந்துள்ளார். போலீசாரிடம் சிக்காமல் இருக்கத் தனது செல்போனை 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டு, 6 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஆம்புலன்ஸை புக் செய்து டெல்லிக்குத் தப்பியுள்ளார்.
டெல்லி வந்ததும் ஆம்புலன்ஸ் டிரைவருக்குக் கூட பணம் கொடுக்காமல் ஓடி மறைந்தவர், நேராகத் தனது பழைய முதலாளியின் மகளைக் குறிவைத்துள்ளார். 15 தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், துவாரகாவில் உள்ள ஒரு ஹோட்டலில் ராகுலை போலீஸார் கைது செய்தனர். மொபைல் கேம்களுக்கு அடிமையான இவர், ஏற்கனவே பலரிடம் கடன் வாங்கித் திருப்பித் தராமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.
