சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த உடனேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28 வரை உயர்த்தப்படக்கூடும் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் எந்தவொரு முன்மொழிவும் தற்போதைய நிலையில் அரசின் பரிசீலனையில் கூட இல்லை என்று அமைச்சகம் மிகவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ​மேலும், உலக அளவில் எரிபொருள் விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாத ஒரே நாடு இந்தியாதான் என்பதையும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் ஆதாயத்திற்காக விலை உயர்த்தப்படாது என்று சொல்லப்படுவதாக கிளம்பிய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரசின் கொள்கை முடிவுகளில் தற்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.