மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்தியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பல்களை ஈரானின் புரட்சிகர காவல் படை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் நோக்கிப் பயணம் செய்ததாகக் கருதப்படும் இந்தக் கப்பல்கள் மீது ஈரான் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, அவற்றை வழிமறித்துக் கைப்பற்றி ஈரான் எல்லைக்குள் கொண்டு சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை மற்றும் பிராந்தியத்தில் நிலவும் கடும் மோதல்கள் காரணமாக, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு ஈரான் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருவதன் பின்னணியில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. டெல்லியில் உள்ள ஈரான் தூதரை நேரில் அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளதுடன், கப்பலில் உள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் கப்பலை விடுவிப்பது குறித்து விளக்கம் கேட்டுள்ளது.
மேலும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்தப் பாதையில், இந்தியக் கப்பல்கள் மீதான தாக்குதல் சர்வதேச விநியோகச் சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரத்தில் சுமுகத் தீர்வுகாண இரு நாடுகளும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், ஈரான் தனது ராணுவக் கட்டுப்பாட்டை அப்பகுதியில் தொடர்ந்து நிலைநிறுத்தி வருவது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
