அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 36 வயதான எரிக்கா மேய்ஸ் என்பவரின் வாழ்க்கை ஒரே இரவில் தலைகீழாக மாறியது. ஒருநாள் காலையில் அவர் கண்விழித்தபோது, மார்புக்குக் கீழே உள்ள உடல் பகுதியை அவரால் உணர முடியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ரத்தத்தில் ஏற்பட்ட ‘எம்.ஆர்.எஸ்.ஏ’ என்ற பாக்டீரியா தொற்று தண்டுவடத்தை பாதித்து, சீழ்கட்டி உருவானது கண்டறியப்பட்டது.
இதனால் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் முடங்கினார். ஒரு காலத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளராக இருந்தவர், போதைப்பொருள் பழக்கத்தால் வீடிழந்து தெருவில் தங்கியிருந்தநிலையில் இந்தத் துயரம் நிகழ்ந்தது.
இந்த பாதிப்பால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற எரிக்கா, பின்னர் மன உறுதியுடன் மீண்டு வரத் தொடங்கினார். தற்போது முதியோர் இல்லத்தில் வசித்து வரும் அவர், தனது போராட்டக் கதையை டிக்டாக் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகிறார். ஆரம்பத்தில் ஆதரவற்றவராக உணர்ந்த அவருக்கு இப்போது உலகம் முழுவதிலும் இருந்து அன்பும் ஆதரவும் குவிந்து வருகிறது.
தன்னைப்போல முதியோர் இல்லங்களில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் ஆதரவற்ற மக்களுக்காகக் குரல் கொடுப்பதையே தனது வாழ்க்கையின் அடுத்த இலக்காக எரிக்கா மாற்றியுள்ளார்.
