இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள உபுட் பகுதியில் அமைந்திருக்கும் அஸ்வாரா என்ற சொகுசு விடுதியில், இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சிலர் அறையில் இருந்த பொருட்களைத் திருடிச் சிக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏப்ரல் 16 முதல் 19 வரை தங்கியிருந்த அந்தப் பயணிகள், செக்-அவுட் செய்யத் தயாரானபோது அவர்கள் மீது ஊழியர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களது பைகளைத் திறந்து சோதனையிட்டபோது, ஊழியர்களே அதிர்ந்து போயினர். சூட்கேஸ்களுக்குள் குளியலறை துண்டுகள், ஹேர் ட்ரையர், கிமோனோ அங்கிகள், மேஜை விரிப்புகள், டிவி ரிமோட் மற்றும் டைனிங் மேஜையில் பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த பாத்திரங்கள் என ஏகப்பட்ட பொருட்களைத் திருடி அடுக்கி வைத்திருந்தனர்.
INDIAN TOURISTS DO NOT LEARN 🤦🏻🤦🏻
Indian tourists, who stayed at Ubud, Bali (Indonesia) were caught by hotel-staff stealing stuff from the hotel.
Why would you go to a foreign country and do such cheap act/crime??
This is embarrassing to watch as an Indian. pic.twitter.com/ETtxJArCgl
— Tarun Gautam (@TARUNspeakss) April 21, 2026
ஊழியர்கள் பொருட்களை ஒவ்வொன்றாக வெளியே எடுக்கும்போது, அந்தச் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்கும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தச் சுற்றுலாப் பயணிகள் மீது காவல்துறை ரீதியான சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க விடுதி நிர்வாகம் விரும்பவில்லை.
திருடப்பட்ட அனைத்துப் பொருட்களையும் திருப்பித் தந்ததையடுத்து, இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் வெளிநாட்டில் இந்தியர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக இணையவாசிகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
