உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த விஜய் சௌபே என்பவர், தனது 16 வயது மகள் ஒருவரைத் தீவிரமாகக் காதலிப்பதை அறிந்து ஆத்திரமடைந்துள்ளார். பலமுறை எச்சரித்தும் மகள் காதலைக் கைவிடாததால், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.

இதற்காகத் தனது நண்பர் அப்துல் மன்னனுடன் சேர்ந்து ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து, “சடங்கு செய்ய வேண்டும்” என்று கூறி மகளைச் சுல்தான்பூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பகல் முழுவதும் சுற்றிவிட்டு, நள்ளிரவு 1 மணியளவில் காரில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த தனது மகளை, விஜய் தனது கைகளாலேயே கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

கொலையை மறைக்கத் திட்டமிட்ட அவர், மகளின் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காகத் தான் கொண்டு வந்திருந்த ஆசிட்டை அவர் முகத்தில் ஊற்றி சிதைத்துள்ளார். பின்னர் உடலைக் கால்வாயில் வீசிவிட்டு எதுவுமே தெரியாதது போல லக்னோ திரும்பியுள்ளார். இரண்டு நாள் கழித்து தனது மகளைக் காணவில்லை என ஆன்லைனில் புகார் அளித்து நாடகமாடியுள்ளார்.

ஆனால், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்த போலீஸார், விஜய்யின் கிரிமினல் திட்டத்தை அம்பலப்படுத்தினர். தற்போது விஜய்யும் அவரது நண்பர் அப்துல் மன்னனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.