பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை, அக்கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. குறிப்பாகத் தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் தனது மருமகள் சௌமியா அன்புமணி குறித்துப் பேசுகையில், “சௌமியா வெற்றி பெற்றால் தர்மபுரி விரைவில் ‘அதர்மபுரி’ எனப் பெயர் எடுக்கும்” என மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், “இந்த ராமதாஸ் தோற்கலாம், ஆனால் துரோகம் ஒருபோதும் ஜெயிக்கக் கூடாது” எனத் தனது அரசியல் வாரிசான அன்புமணிக்கு எதிராகப் பகிரங்கமாக யுத்தப் பிரகடனம் செய்துள்ளார். தனது அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை உதாரணமாகக் காட்டிய ராமதாஸ், “அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்.
ஆனால் ஸ்டாலின் தனது தந்தை கலைஞரைச் சாகும் வரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டார். ஆனால் எனக்கு வாய்த்த பிள்ளையோ, நான் உயிரோடு இருக்கும்போதே என்னைச் செத்துப்போனதாக நினைத்து அரசியல் செய்கிறார். இதைவிட ஒரு தகப்பனுக்குப் பெரிய அவமானம் என்ன இருக்க முடியும்?” எனத் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
“என் ரத்தமே எனக்கு விஷமானாலும், என் தொண்டர்கள் எனக்கு மருந்தாக இருப்பார்கள் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், அன்புமணிக்கு வாக்களிப்பது தனது தலையில் மண்ணள்ளிப் போடுவதற்குச் சமம் எனத் தொண்டர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் நேரத்தில் ராமதாஸின் இந்த ‘உடைப்பு’ அறிக்கை பாமக வட்டாரத்தில் பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
