அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் குறித்து வெளியிட்டுள்ள புதிய தகவல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “நான் இந்தப் போரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறேன், ஈரானின் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது” என டிரம்ப் அதிரடியாகக் கூறியுள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கக் கடற்படை மேற்கொண்டுள்ள முற்றுகையினால் ஈரான் பொருளாதார ரீதியாகச் சின்னாபின்னமாகி வருவதாகவும், அந்நாடு ஒரு நாளைக்கு சுமார் 500 மில்லியன் டாலர்களை இழப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் தலைமை இப்போது தனது எண்ணெய்யை விற்பனை செய்ய வழியின்றி, நூற்றுக்கணக்கான கப்பல்களை அமெரிக்காவின் டெக்சாஸ், லூசியானா மற்றும் அலாஸ்கா மாகாணங்களை நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு புதிய ஒப்பந்தம் ஏற்படும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகை விலக்கப்படாது” என்று கூறியுள்ள அவர், இந்த முறை ஏற்படப்போகும் ஒப்பந்தம் முந்தைய அதிபர்கள் செய்த அணுசக்தி ஒப்பந்தத்தை விடப் பலமடங்கு வலிமையானதாகவும் அமெரிக்காவிற்குச் சாதகமானதாகவும் இருக்கும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அதிரடிப் பேச்சு மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப்பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
