நடிகர்  விஜய், தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தொகை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விரிவான விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மகன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் உள்ள விவரங்கள் குறித்து நிலவும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இது குறித்து அவர் கூறுகையில்,

“தனது கணக்குப் புத்தகத்தில் (Account Book) தந்தைக்கு இவ்வளவு பணம் கொடுத்திருக்கிறேன் என்று விஜய் எழுதியுள்ளதை தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். ஆனால், அதனைப் பார்த்த பலரும் அவர் தந்தைக்கு ‘கடன்’ கொடுத்திருப்பதாகத் தவறாகப் புரிந்துகொண்டு செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு மகனாக விஜய் செய்த உதவியை நியாயப்படுத்திப் பேசினார்.
“ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கும் ஒரு மகன், தனது தந்தைக்கு ஒரு 5 கோடி ரூபாய் கொடுக்கக் கூடாதா? அவர் கணக்குப் புத்தகத்தில் ‘கொடுத்தேன்’ என்றுதான் குறிப்பிட்டுள்ளாரே தவிர, எந்த இடத்திலும் ‘கடனாகக் கொடுத்தேன்’ எனக் குறிப்பிடவில்லை. மகன் தந்தைக்கு வழங்கிய தொகையை கடனாகச் சித்தரிப்பது முறையல்ல என உருக்கமாகத் தெரிவித்தார்.

மேலும் விஜய் அரசியல் களத்தில் இறங்கியுள்ள சூழலில், அவரது சொத்து விவரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்தச் சூழலில், தந்தையே முன்வந்து மகனுக்கு ஆதரவாகவும், உண்மை நிலையை விளக்கியும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது