தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.குமாருக்கு ஆதரவாக, நடிகர் சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவில் இன்ஜினியரான ஆர்.குமார், அதிகாரப்பூர்வமாக அரசியலில் இறங்குவதற்கு முன்னரே பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துச் செய்தவர் என்று பாராட்டியுள்ள சிபி, வேளச்சேரியின் நீண்டகாலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இவரே சரியான நபர் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

​வேளச்சேரி தொகுதியில் நிலவும் பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகளைத் தான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்றும், இந்த நிலை மாற வேண்டுமானால் மக்கள் மாற்றத்தை நோக்கி வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தவெக-வின் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களித்து ஆர்.குமாரை வெற்றி பெறச் செய்யுமாறு அவர் ஆற்றியுள்ள இந்த உரை, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வேளச்சேரி தேர்தல் களத்தை சூடாக்கியுள்ளது.