விமான பயணம் என்பது நேரத்தை மிச்சப்படுத்தவும், சுகமான பயணத்திற்காகவும் தான் பெரும்பாலானோரால் தேர்வு செய்யப்படுகிறது. ஆனால், ஹைதராபாத்தில் இருந்து ஹுப்ளிக்கு புறப்பட்ட Fly91 விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு அந்த 4 மணி நேரம் ஒரு நரகமாகவே மாறியுள்ளது.

மதியம் 3 மணிக்கு ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட IC3401 என்ற விமானம், 4:30 மணிக்கு ஹுப்ளியில் தரையிறங்க வேண்டும். ஆனால், தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

விமானம் தனது கட்டுப்பாட்டை இழப்பதை உணர்ந்த விமானி, தரையிறங்குவதை ரத்து செய்துவிட்டு வானத்திலேயே வட்டமடிக்கத் தொடங்கினார். விமானம் தரையிறங்க முடியாத சூழலில், அதன் எடையைக் குறைக்கவும் பாதுகாப்பு கருதியும் அதிலுள்ள எரிபொருளைத் தீர்க்க வேண்டிய கட்டாயம் விமானிக்கு ஏற்பட்டது.

இதனால் சுமார் 4 மணி நேரம் முண்டகோட், தாவணகெரே மற்றும் ஷிவமோகா ஆகிய பகுதிகளின் மேல் அந்த விமானம் வானத்திலேயே சுற்றித் திரிந்தது. உள்ளே இருந்த பயணிகள் மரண பயத்தில் கதறி அழத் தொடங்கினர். சிலர் கடவுளை வேண்டிக்கொண்டும், சிலர் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுத வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. “நாங்கள் உயிரோடு திரும்புவோமா?” என்ற ஏக்கத்தோடு பயணிகள் ஒவ்வொரு நிமிடத்தையும் கடந்துள்ளனர்.

இறுதியாக விமானியின் பெரும் முயற்சியால் விமானம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டது. இரவு 7:30 மணியளவில் விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. விமானம் தரைதட்டியதும் பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்; சிலர் தரை இறங்கியதும் மண்ணைத் தொட்டு வணங்கி கண்ணீர் விட்டனர்.

ஒருபுறம் விமானியின் சாமர்த்தியம் பாராட்டப்பட்டாலும், மறுபுறம் விமான நிறுவனம் தங்களுக்கு முறையான தகவல் அளிக்கவில்லை எனப் பயணிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.