ஓசூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சமூக நீதி மற்றும் சுயமரியாதை மண்ணான தமிழ்நாட்டின் பின்னால் ஒட்டுமொத்த இந்தியாவே நிற்பதாகக் குறிப்பிட்டார்.

பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோர் இந்தியாவுக்கே பகுத்தறிவைக் கற்றுக்கொடுத்தவர்கள் என்றும், அவர்களின் திராவிடக் கொள்கையைப் பின்பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் சமூக நீதியை முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்த கார்கே, மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு 38 மாதங்கள் ஆகியும், பிரதமர் மோடி அதைச் செயல்படுத்தாமல் எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், முதலமைச்சர் ஸ்டாலினின் உறுதுணையுடன் தொகுதி மறுவரையறை மசோதாவை முறியடித்ததாகத் தெரிவித்த அவர், வரவிருக்கும் தேர்தலில் மோடி வேண்டுமா அல்லது ஸ்டாலின் வேண்டுமா என்பதை மக்களே முடிவு செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த உரையின் மூலம் இந்தியா கூட்டணி ஒற்றுமையுடன் இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.