உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், தனது பெற்ற மகள்களையே தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாகவே கடும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கணவர் தனது மனைவி மீது அதீத சந்தேகம் கொண்டு, அவரை கண்காணிப்பதற்காக வீடு முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார். மேலும், மனைவியைத் தாக்கி, பல நாட்களாக உணவு கூட கொடுக்காமல் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இரவு, ஒரு குழந்தையை கழிவறைக்கு அழைத்துச் சென்ற கணவர், பின்னர் அறையில் வைத்து தனது இரண்டு பெண் குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதிகாலை 2.30 மணியளவில் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மனைவியை உள்ளே விடாமல் தடுத்துள்ளார்.

அதன் பிறகு, அவரே போலீசாருக்கு போன் செய்து குழந்தைகளைக் கொன்றுவிட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளார். தனது மகனை மனைவியுடன் அனுப்பிவிட்டு, பெண் குழந்தைகளைத் தன்னிடமே வைத்துக் கொள்ளப் போவதாக அவர் அடிக்கடி கூறி வந்த நிலையில், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். கைதான கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.