தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கிடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தளி மற்றும் ஓசூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
தளி தொகுதியில் பாஜக வேட்பாளர் நாகேஷ்குமாருக்கும், ஓசூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கும் வாக்களிக்குமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். பிரசாரத்தின் போது திமுக கூட்டணியைக் கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, தளி தொகுதியின் தற்போதைய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் மீது கொலை மற்றும் ஊழல் வழக்குகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
இப்படிப்பட்ட குற்றப் பின்னணி கொண்டவர்களை வேட்பாளராக நிறுத்தியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என்று அவர் சாடினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காத இந்த ஆட்சியை மக்கள் இந்தத் தேர்தலில் வீழ்த்துவது உறுதி என்றும் அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
