ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த போர் பதற்றம், பாகிஸ்தானின் சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்காலிகமாக தணிந்திருந்தது. முன்னதாக, ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு ஹார்முஸ் ஜலசந்தியும் திறக்கப்பட்டது. லெபனான் மீதான தாக்குதலையும் நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டதால் ஒரு இக்கட்டான சூழல் தவிர்க்கப்பட்டது. ஆனால், தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்வதற்கு ஈரான் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதே இதற்குக் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் உலக நாடுகளுக்கு மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதுடன், மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.