மகாராஷ்டிர மாநிலம் அமராவதி அருகே பரத்வாடா பகுதியில், பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. அதிக பெண்களை வலைவீசிப் பிடிப்பது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட ‘பெட்’ (Bet) மற்றும் வக்கிர புத்தியால் பல இளம்பெண்கள் சீரழிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஏராளமான சிறுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான அயன் அகமது என்பவனைப் பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவன் பெண்களைக் கவரப் பயன்படுத்திய நூதன முறை தெரியவந்தது. பெண்களிடம் சாதாரணமாக ‘ஹாய், ஹலோ’ என்று மெசேஜ் அனுப்பினால் அவர்கள் பதில் அளிக்க மாட்டார்கள் என்பதால், “அன்று அங்கே பார்த்தது உங்களைத்தானே?” என்பது போன்ற கேள்விகளை அனுப்பி, அவர்களைப் பதில் சொல்லத் தூண்டுவான். ஆர்வம் காரணமாகப் பெண்கள் பதில் அளிக்கத் தொடங்கும் போதே, மெல்லப் பேசி அவர்களைத் தனது வலைக்குள் வீழ்த்துவான். இதற்காக ஒரு ‘காதல் குரு’வின் ஆலோசனையையும் அவன் பெற்றுள்ளான்.
பெண்களைத் தனிமையில் வரவழைக்க அமராவதியில் உள்ள ஒரு பிளாட்டை அயன் பயன்படுத்தியுள்ளான். இந்த பிளாட்டை மானவ் சுகந்தி என்பவர் மூலம் வாடகைக்கு எடுத்துள்ளான். ஒரு முறை பயன்படுத்த ரூ.500 என்ற அடிப்படையில், கடந்த ஓராண்டில் பலமுறை இந்த இடத்தைப் பயன்படுத்தியது தெரியவந்தது. ஏப்ரல் 16 அன்று மானவ் சுகந்தியும் கைது செய்யப்பட்டார். இதுவரை இந்த வழக்கில் 8 பேர் கைதாகியுள்ளனர்.
அயன் தனது நண்பர்களிடம் ‘கெத்து’ காட்டுவதற்காகவும், தான் எத்தனை பெண்களை வீழ்த்தினேன் என்பதற்கு ஆதாரமாகவும் ஆபாச வீடியோக்களை எடுத்துள்ளான். பண விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், அந்த வீடியோக்களை நண்பர்களே சமூக வலைதளங்களில் கசியவிட்டுள்ளனர். அமராவதியில் 2 மற்றும் பரத்வாடாவில் 3 என மொத்தம் 5 கஃபேக்களில் (Cafes) இது போன்ற அநாகரீகச் செயல்கள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது அரசியல் களத்திலும் அனலைக் கிளப்பியுள்ளது. பாஜக தலைவி நவநீத் ராணா, குற்றவாளிகளின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதற்குப் பதிலடியாக, சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பியாரே கான், “நவநீத் ராணா வதந்திகளைப் பரப்பி கலவரத்தைத் தூண்டப் பார்க்கிறார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நாக்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமாகக் கூறினார். மேலும் தற்போது சைபர் போலீசார் இந்த வீடியோக்கள் வேறு யாருக்கெல்லாம் பகிரப்பட்டது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
