மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டம் போர்காவ் கிராமத்தில், சமைத்த இறைச்சி சரியாக வேகவில்லை என்று கணவர் திட்டியதால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் சேதனா மனோஜ் ஜாதவ் (33) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒரு சிறு தகராறு எப்படி ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை சிதைக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு, சேதனாவின் கணவர் மனோஜ் ஜாதவ் தனது நண்பர் ஒருவரை இரவு உணவிற்காக வீட்டிற்கு அழைத்திருந்தார். மனைவியிடம் “மட்டன் குழம்பை ருசியாகவும், பதமாகவும் சமைக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார். அதன்படி சேதனாவும் சமைத்து பரிமாறினார்.

ஆனால், நண்பர் முன்னிலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மனோஜ், மட்டன் சரியாக வேகவில்லை என்று கூறி சேதனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்தச் சிறு பிரச்சனை, மனோஜின் சந்தேக குணம் மற்றும் குடிப்பழக்கம் காரணமாகப் பெரிய சண்டையாக மாறியது. நண்பர் முன்னிலையிலேயே மனைவியைக் கடுமையாகத் திட்டி அவமானப்படுத்தியுள்ளார்.

கணவரின் தொடர்ச்சியான சித்திரவதை மற்றும் பொதுவெளியில் ஏற்பட்ட அவமானம் காரணமாக மனமுடைந்த சேதனா, சமையலறைக்குள் சென்று அங்கிருந்த விஷத்தை எடுத்து அருந்தினார். பின்னர் வெளியே வந்து கணவரிடம் தான் விஷம் குடித்ததைச் சொன்னதும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டிலேயே மனோஜ் மீது குடும்ப வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 2017-ல் “இனி திருந்தி வாழ்வோம்” என்ற வாக்குறுதியின் பேரில் சேதனா அவரை மன்னித்து மீண்டும் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு லேக் என்ற மகனும், அன்வி என்ற மகளும் உள்ளனர். தந்தையின் முரட்டுத்தனமான கோபத்தால் தற்போது இரண்டு குழந்தைகளும் தாயின் அன்பை இழந்து அனாதையாக நிற்கின்றனர்.

சேதனாவின் தாய்மாமன் மனோகர் ரத்தோர் அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாக மனோஜ் ஜாதவ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.