இந்திய நாடாளுமன்றத்தில் ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து எம்பிக்களுக்கும் மிக உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். “அரசியல் பாகுபாடுகளைத் தள்ளி வைத்துவிட்டு, உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை நினைத்துப் பார்த்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவிற்கு ஆதரவு அளியுங்கள்” என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் பெண்களுக்குச் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்வதுடன், இந்திய ஜனநாயகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இது ஒரு பொன்னான வாய்ப்பு என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், லோக்சபா இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது மற்றும் புதிய தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது.
இது “ஒரே நபர், ஒரு ஓட்டு, ஒரே மதிப்பு” என்ற கொள்கையை வலுப்படுத்தும் என்றாலும், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையுமோ என்ற அச்சத்தையும் கிளப்பியுள்ளது. 2029 தேர்தலிலேயே பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நோக்கில், ஏப்ரல் 16, 17, 18 ஆகிய தேதிகளில் சிறப்பு அமர்வுகள் மூலம் இந்த மசோதாக்களை நிறைவேற்ற மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது.
