மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தின் போது, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு மத்திய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிப் பேசினார். மத்திய அரசு வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில், மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மற்றும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்து ஒரு ‘சாண்ட்விச்’ அரசியலை முன்னெடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் 2023-ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மட்டுமே திமுக ஆதரிப்பதாகவும், ஆனால் அதனுடன் தொகுதி மறுவரையறையை முடிச்சுப் போடுவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதனால் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தத் தொகுதி மறுவரையறை மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திய டி.ஆர். பாலு, இதில் திமுக சமரசமற்ற உறுதியான எதிர்ப்பைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திய மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசு திட்டமிட்டுச் செய்யும் இந்த அரசியல் சூழ்ச்சியை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என்றும் தனது உரையில் எச்சரித்தார்.
