வளைகுடா பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானில் இருந்து புறப்பட்ட 8 பிரம்மாண்ட எண்ணெய் டாங்கர் கப்பல்கள், மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியைத் தாண்ட முயன்றபோது, அமெரிக்கக் கடற்படையால் அதிரடியாக வழிமறிக்கப்பட்டுள்ளன.

அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடி உத்தரவின் பேரில், ஓமன் வளைகுடா பகுதியில் இந்த ‘லட்சுமண ரேகை’ முற்றுகை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஈரான் தனது துறைமுகங்களில் இருந்து கப்பல்களை அனுப்பிய சில மணிநேரங்களிலேயே, அதிநவீன தொழில்நுட்பம் மூலம் அவற்றைக் கண்காணித்த அமெரிக்கப் படைகள், நடுக்கடலில் கப்பல்களைச் சூழ்ந்து கொண்டு மீண்டும் ஈரானுக்கே திரும்புமாறு எச்சரித்துத் திருப்பி அனுப்பியுள்ளன.

அமெரிக்க மத்திய கமாண்ட் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் இது குறித்துக் கூறுகையில், “மத்திய கிழக்குக் கடற்பரப்பில் இப்போது அமெரிக்காவின் ஆதிக்கம் மட்டுமே நிலவுகிறது. 36 மணிநேரத்திற்குள் ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை முழுமையாக முடக்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் 90 சதவீத பொருளாதாரம் கடல்வழி வர்த்தகத்தை சார்ந்தே இருப்பதால், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை அந்த நாட்டின் முதுகெலும்பை உடைக்கும் எனக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப், போர் நிறுத்தக் காலத்தை நீட்டிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை எனவும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த அதிரடி முற்றுகையினால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.