ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவின் தடையை மீறி சீனக் கப்பலான ‘ரிச் ஸ்டாரி’ ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து சீனா நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா கடுமையான கடல்வழி முற்றுகையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுமார் 2,50,000 மெத்தனால் எரிபொருளைச் சுமந்து செல்லும் இந்த சீன டாங்கர் தடையை மீறிச் சென்றிருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அமெரிக்காவின் 15 போர் கப்பல்கள் அந்தப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த போதிலும், அவற்றின் கண்காணிப்பைத் தகர்த்து சீனா தனது பலத்தைக் காட்டியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது அமெரிக்காவின் கடல்வழி முற்றுகைக்குக் கிடைத்த மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஈரானுடன் வர்த்தகம் செய்ததற்காக ஏற்கனவே அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ‘ஷாங்காய் ஷுவான்ரன் ஷிப்பிங்’ நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல், தற்போது சீனாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து ‘முரலிகிஷன்’ என்ற மற்றொரு தடை செய்யப்பட்ட சீனக் கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி சீனா மேற்கொண்டுள்ள இந்தத் துணிச்சலான நகர்வு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியலில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
