ஜார்க்கண்ட் மாநிலத்தில், உயிரிழந்த சகோதரியின் உடலை நான்கு நாட்களாக வீட்டிற்குள்ளேயே வைத்து, பின்னர் அதனை எரிக்க முயன்ற சகோதரர்களின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லிபிகா குமாரி என்ற பெண் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி உயிரிழந்த நிலையில், அவரது உடல் குளியலறையில் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. லிபிகாவின் தந்தை ஒரு முன்னாள் விஞ்ஞானி ஆவார். அவர் மறைந்த பிறகு லிபிகா கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. நான்கு நாட்களுக்குப் பிறகு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்த பின்னரே இந்தத் திகில் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த மரணத்தில் லிபிகாவின் இரு சகோதரர்களும் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்களை அளிப்பது மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளது. மூத்த சகோதரர் பிரணவ் கூறுகையில், லிபிகா உடல்நலக்குறைவால் இறந்ததாகவும், உடலில் புழுக்கள் மொய்த்ததைப் பார்க்க முடியாமல் அவற்றை அகற்றவே உடலை எரிக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இளைய சகோதரர் பிரத்யுத் இதனை மறுப்பதோடு, தனக்குத் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், தான் அந்த உடலைப் பார்க்கவே இல்லை என்றும் கூறியுள்ளார். தன்பாத் காவல்துறையினர் இந்த வினோதமான “குளியலறை திகில்” சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.