ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பட்டப்பகலில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் தாக்க முயன்ற மர்ம நபரை, அந்தப் பெண் துணிச்சலுடன் எதிர்த்துப் போராடி விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரின் ஜவஹர் சர்க்கிள் பகுதியில் கடந்த மார்ச் 25-ஆம் தேதி மாலை, ஒரு கர்ப்பிணிப் பெண் தனது வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரைத் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவன், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தைப் பயன்படுத்திக் கொண்டு திடீரென அந்தப் பெண்ணை கட்டிப்பிடித்து அத்துமீறினார்.

எதிர்பாராத இந்தத் தாக்குதலால் பயந்த  அந்தப் பெண், தனது உடல்நிலையைத் தாண்டி மிகுந்த தைரியத்துடன் அந்த நபரை எதிர்த்துப் போராடினார். அந்தப் பெண்ணின் ஆக்ரோஷமான பதிலடியைக் கண்ட அந்த மர்ம நபர், பயந்துபோய் அங்கிருந்து தப்பியோடினான். இந்த  காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் புகார் அளித்தும், ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய  காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் (ASI) மற்றும் தலைமைக் காவலர் ஆகிய இருவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவின் அடிப்படையில், தப்பியோடிய குற்றவாளியைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் யாருக்காவது இந்த நபர் குறித்துத் தெரியவந்தால் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தச் சம்பவம் ஜெய்ப்பூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தைரியமாகச் செயல்பட்ட அந்தப் பெண்ணிற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.