மனைவி தனக்கு ஜீவனாம்சம் (Alimony) வேண்டாம் என்று சுயமாக எழுதிக் கொடுத்திருந்தாலும், எதிர்காலத்தில் அவர் மீண்டும் ஜீவனாம்சம் கோருவதைத் தடுக்க முடியாது என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஹோஷியார்பூர் குடும்ப நீதிமன்றம் மனைவிக்கு மாதம் 6,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து, கணவர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஏற்கெனவே மனைவிக்கு 60,000 ரூபாய் செட்டில்மென்ட் செய்யப்பட்டுவிட்டதாகவும், தனக்கு ஜீவனாம்சம் வேண்டாம் என அவர் எழுதிக் கொடுத்துவிட்டதாகவும் கணவர் வாதிட்டார்.
மேலும், மனைவி ஆரோக்கியமாக இருப்பதால் அவர் வேலைக்குச் சென்று சம்பாதிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஷாலினி சிங் நாக்பால் தலைமையிலான அமர்வு, மனைவி உழைக்கிறார் என்பதற்காக அவருக்கு ஜீவனாம்சம் தர மறுக்க முடியாது என்றும், கணவன் பணம் தரும் வரை மனைவி பட்டினியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முறையல்ல என்றும் தெரிவித்தது.
ஜீவனாம்சம் வேண்டாம் எனச் செய்யும் ஒப்பந்தம் பொதுக் கொள்கைக்கு எதிரானது என்பதால், எப்போது வேண்டுமானாலும் மனைவி சட்டப்படி அதைக் கோரலாம் என நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
