மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்த நபர், 8-ஆம் வகுப்பு மாணவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 35 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதாவது சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விகாஸ் திலீப் கெய்க்வாட் (35) என்பவர் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். அதே மையத்திற்கு 12 வயது சிறுவன் ஒருவன் பயிற்சி வகுப்பிற்காகச் சென்று வந்துள்ளான். கடந்த டிசம்பர் 2025 முதல், விகாஸ் அந்தச் சிறுவனுக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், சிறுவனை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து, அதனை வைத்து மிரட்டி மனரீதியாகவும் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு உணவிற்குப் பிறகு, அந்தச் சிறுவன் தான் பள்ளிக்குச் செல்லப் போவதில்லை என்று தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளான். தந்தை காரணத்தைக் கேட்டபோது, விகாஸ் தனக்கு இழைத்த கொடுமைகளைச் சிறுவன் அழுதுகொண்டே விவரித்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை, உடனடியாக பயிற்சி மையத்திற்குச் சென்று விசாரித்த பிறகு, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தந்தையின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விகாஸ் திலீப் கெய்க்வாட்டை கைது செய்தனர். பிடிபட்ட நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பயிற்சி மையங்களுக்குச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்புக் குறித்து இச்சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
