ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தில், பிளஸ்-2 மாணவி ஒருவரைக் காதலிக்க மறுத்த காரணத்திற்காகக் கொடூரமாகக் கொலை செய்த இளைஞரைப் போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் – நாகமணி தம்பதியின் 17 வயது மகள், சமீபத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காகக் காத்திருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற இளைஞர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த மாணவியைக் காதலிப்பதாகக் கூறித் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவியை அவர் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவியின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த சமயம் பார்த்து, வெங்கடேஷ் வீட்டிற்குள் புகுந்துள்ளார். மீண்டும் திருமணத்திற்கு வற்புறுத்தியபோது மாணவி மறுக்கவே, ஆத்திரமடைந்த வெங்கடேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டுத் தப்பி ஓடினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்டித்து, உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். குற்றவாளியை உடனடியாகக் கைது செய்யக் கோரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் முழக்கமிட்டனர்.
இதற்கிடையில் தலைமறைவாக இருந்த வெங்கடேசைத் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு போலீசார் கைது செய்தனர். விசாரணைக் காவலில் இருந்த அவரை, பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு இடத்திற்கு மாற்ற போலீசார் முயன்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக வெங்கடேஷ் இரண்டு போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்றுள்ளார்.
உடனடியாகச் செயல்பட்ட போலீசார், வெங்கடேஷின் கால்களில் துப்பாக்கியால் சுட்டு அவரைப் பிடித்தனர். மேலும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெங்கடேஷ் மற்றும் அவரால் தாக்கப்பட்ட போலீசார் இருவரும் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
