ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள சுங்கி மலைப்பாதை பகுதியில், இன்று சனிக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து ஒன்று 40 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பவானிபட்னாவிலிருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த அரசுப் பேருந்து, நள்ளிரவு 2 மணியளவில் பனசமனகுடி கிராமம் அருகே ஒரு குறுகிய வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்தது.
இந்த கோர விபத்தில் கலாஹாண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஜம்பாப் பிஹாரி (40) என்ற பயணி உயிரிழந்தார். மேலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேருந்தின் அடியில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர்.
படுகாயமடைந்தவர்கள் பொட்டாங்கி ஆரம்பச் சுகாதார நிலையத்திலும், தீவிர சிகிச்சை தேவைப்பட்டவர்கள் கோராபுட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். “பேருந்து ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததே இந்த விபத்துக்குக் காரணம்” எனப் பேருந்தின் முன் வரிசையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான உண்மையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
