மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமீபகாலமாகப் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது தனது கைகளில் மூன்று விதமான அதிநவீன ஃபிட்னஸ் கருவிகளை அணிந்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, ஹூப் ஃபிட்னஸ் பேண்ட், மற்றும் விரலில் அணியும் ஓரா ரிங் 4 ஆகிய மூன்றையும் அவர் ஒரே நேரத்தில் அணிந்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ள தரவு ஆய்வாளர் அபிஷேக் சிங்கால், இந்த ஒவ்வொரு கருவியும் வெவ்வேறு ஆரோக்கியத் தரவுகளைக் கண்காணிக்க உதவுகின்றன என்று தெரிவித்துள்ளார். இதில் ‘ஓரா ரிங்’ தூக்கத்தின் தரம் மற்றும் உடல் தேறுதல் குறித்தும், ‘ஹூப் பேண்ட்’ அன்றாட உடல் உழைப்பு மற்றும் இதயத் துடிப்பு மாறுபாடுகள் குறித்தும் மிகத் துல்லியமான தகவல்களை வழங்குகின்றன.

 

அதேசமயம் ‘ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3’ உடற்பயிற்சி மற்றும் ஜிபிஎஸ் வசதிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மம்தா பானர்ஜி போன்ற ஒரு மாநிலத்தின் முதல்வர், தனது ஆரோக்கியத்தைக் கண்காணிக்க இவ்வளவு தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொழில்நுட்பம் எவ்வாறு தனிநபர் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், சாதாரண மக்களுக்கு இவ்வளவு கருவிகள் தேவையில்லை என்றும், முறையான வாழ்வியல் முறையே போதுமானது என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.