தேர்தல் பணிகளில் இரவு பகலாக உழைத்து வரும் பூத் லெவல் தொண்டர்களை உற்சாகப்படுத்த பிரதமர் மோடி ஒரு புதிய வியூகத்தை வகுத்துள்ளார். ‘எனது பூத் வலிமையான பூத்’ (Mera Booth Sabse Mazboot) என்ற பெயரில், வரும் 13-ம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைன் வாயிலாக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களிடம் அவர் உரையாற்ற உள்ளார்.
வழக்கமாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் மட்டுமே ஆலோசனை நடத்தும் நிலையை மாற்றி, நேரடியாக களத்தில் வேலை செய்யும் சாதாரண தொண்டர்களிடம் மோடி பேசவிருப்பது கட்சி வட்டாரத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என மோடி அறிவுறுத்தியிருந்தார். இந்த ஆன்லைன் சந்திப்பு தேர்தல் களத்தில் பாஜகவிற்கு ஒரு கூடுதல் பலத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
