உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கிட்னி திருட்டு வழக்கில், ஒரு அரசு மருத்துவமனை பாதுகாப்பு ஊழியரின் (Security Guard) பின்னணி குறித்து வெளியாகி உள்ள தகவல்கள் போலீஸாரையே அதிரவைத்துள்ளன. ஹெலிக்ஸ் அரசு மருத்துவமனையில் வெறும் 20,000 ரூபாய் சம்பளத்திற்குப் பாதுகாப்பு ஊழியராகப் பணியாற்றும் அஜய் என்பவருக்கு, இந்த கிட்னி ராக்கெட் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு சாதாரண ஊழியராகத் தெரிந்த அஜய், ‘ஸ்டார் ஹாஸ்பிடல்’ என்ற ஒரு மருத்துவமனைக்கே உரிமையாளராக இருந்துள்ளார் என்பதுதான் இதில் உச்சக்கட்ட அதிர்ச்சி. கிட்னி திருட்டு கும்பலின் முக்கிய குற்றவாளியான சிவம் என்பவருக்கு, மற்ற கூட்டாளிகளை அறிமுகம் செய்து வைத்ததே இந்த அஜய் தான் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுநீரகம் தேவைப்படும் நோயாளிகளையும், தானம் செய்பவர்களையும் பல்வேறு மருத்துவமனைகளுடன் இணைக்கும் முக்கியத் தரகராக இவர் செயல்பட்டுள்ளார்.
ஒரு சாதாரணப் பாதுகாப்பு ஊழியருக்கு இவ்வளவு பெரிய மருத்துவமனையை நடத்தப் பணம் எங்கிருந்து வந்தது? கிட்னி விற்ற பணத்தில்தான் இந்த மருத்துவமனையை உருவாக்கினாரா? எனப் பல கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள போலீஸார், அவரது வங்கி கணக்குகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
