டெல்லி மங்கோல்புரி பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது காதலனாலும் அவரது உறவினர்களாலும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். வக்கிரமான பாலியல் அச்சுறுத்தலுக்குப் பணியாததே இந்தக் கொலைக்குக் காரணம் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அதாவது மங்கோல்புரி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் வீடுகளில் துப்புரவு வேலை செய்து வந்த 35 வயது திருமணமான பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மதியம், அந்த இளைஞர் தனது நண்பரின் தங்கும் விடுதி (PG) அறைக்கு அந்தப் பெண்ணை வரவழைத்துள்ளார். அங்கு அந்த இளைஞரின் 50 வயதுடைய மாமாவும், அவரது 52 வயது நண்பரும் ஏற்கனவே காத்திருந்தனர்.
அறைக்குள் வந்த அந்தப் பெண்ணிடம், தனது மாமா மற்றும் அவரது நண்பருடன் பாலியல் ரீதியாக உடன்படுமாறு அந்த இளைஞர் வற்புறுத்தியுள்ளார். இந்தக் கீழ்த்தரமான கோரிக்கையை அந்தப் பெண் கடுமையாக எதிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலன், அந்தப் பெண்ணை நிலத்தில் தள்ளி, பலமாகத் தாக்கியுள்ளார். பின்னர், ஒரு போர்வையைப் போர்த்தி அந்தப் பெண்ணின் முகத்தை அழுத்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கொலை நடந்த சமயத்தில், இளைஞரின் மாமாவும் அவரது நண்பரும் அறைக்கு வெளியே எவரும் வராதபடி காவல் காத்துள்ளனர். கொலை செய்த பிறகு, சடலத்தை அறையிலிருந்த ‘பெட் பாக்ஸ்’ (Bed box) உள்ளே திணித்து மறைத்துவிட்டு மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அன்று மாலை 7 மணியளவில் அறையின் உரிமையாளர் வந்தபோது, கதவு பாதி திறந்திருப்பதைக் கண்டுள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, பெட் பாக்ஸில் இருந்து ஒரு கால் மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பெட்டியைத் திறந்து பார்த்தபோது பெண்ணின் சடலம் இருப்பதை அறிந்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.
மேலும் உடனடியாக துணை போலீஸ் கமிஷனர் விக்ரம் சிங் தலைமையிலான போலீசார், விரைந்து செயல்பட்டு சில மணிநேரங்களிலேயே கொலையாளி மற்றும் அவருக்கு உதவிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
