உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பியூனாக வேலை பார்த்து வரும் பிரபாகர் என்ற இளைஞன், ஒரு பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி கடந்த 6 ஆண்டுகளாகச் சீரழித்து வந்துள்ளார். ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததால், அந்தப் பெண் ஏற்கனவே 3 முறை கர்ப்பமாகி, கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாகக் கடந்த ஜனவரி மாதம் புகாரளிக்கப்பட்ட நிலையில், பிரபாகர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், ஜாமீனில் வெளியே வந்த அந்த நபர், “நான் செய்த தவறுக்கு வருந்துகிறேன், உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன்” என நாடகமாடி மீண்டும் அந்தப் பெண்ணை ஏமாற்றித் தற்போது 4-வது முறையாகக் கர்ப்பமாக்கியுள்ளார்.
சிறையிலிருந்து வந்த பிறகும் திருமண ஆசை காட்டித் தன்னை 4-வது முறையாகக் கர்ப்பமாக்கிவிட்டு, இப்போது திருமணம் செய்ய முடியாது என பிரபாகர் மறுப்பதாக அந்தப் பெண் கண்ணீருடன் போலீசில் புகாரளித்துள்ளார். தற்போது அந்தப் பெண் 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், பிரபாகர் மீண்டும் தலைமறைவாகிவிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பெற்ற கோரக்நாத் போலீசார், தலைமறைவாக உள்ள அந்த நபரைக் கைது செய்யத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆசை வார்த்தைகளை நம்பி ஒரு பெண் மீண்டும் மீண்டும் அதே நபரிடம் ஏமாந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
