அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 40 நாட்களுக்குப் பிறகு எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம், வெறும் 24 மணி நேரத்திற்குள் சிதைந்து போயுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டாலும், லெபனான் மீதான தனது ஆவேசத்தை அது குறைக்கவில்லை.

நேற்று லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

இதனால் உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், மத்திய கிழக்கில் மீண்டும் ரத்த ஆறு ஓடத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்தத்திற்கு தான்தான் காரணம் என்பது போலவும், இதில் லெபனானும் அடங்கும் என்றும் மார்தட்டிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தற்போது சர்வதேச அளவில் அசிங்கப்பட்டுள்ளார்.

“லெபனான் இந்த ஒப்பந்தத்தில் கிடையாது, அது தனிப் போர்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டு உடைத்ததோடு, ஷெரீப்பின் அழைப்பையும் நிராகரித்துள்ளார். இஸ்ரேலின் லெபனான் தாக்குதலால் ஆத்திரமடைந்த ஈரான், உலக வர்த்தகத்தின் முக்கிய பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ மீண்டும் அதிரடியாக மூடியுள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், அமைதி ஒப்பந்தம் நீடிக்குமா என்ற மிகப்பெரிய கேள்விக்குறியும் எழுந்துள்ளது.