நேபாளத்தில் பொது இடத்தில் குட்கா துப்பிய இந்திய சுற்றுலாப் பயணிகளை உள்ளூர் இளைஞர் ஒருவர் தட்டிக்கேட்டு சுத்தம் செய்ய வைத்த காணொளி இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தின் முக்திநாத் மற்றும் பொக்காராவுக்கு இடைப்பட்ட சாலையில் காரில் சென்று கொண்டிருந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் சிலர், குட்காவை மென்று சாலை ஓரத்தில் துப்பியுள்ளனர்.
மேலும் இதைக் கண்டு ஆத்திரமடைந்த நேபாள இளைஞர் ஒருவர், அவர்களின் வாகனத்தை மறித்து, “இது இந்தியா கிடையாது, நேபாளம் இவ்வளவு பெரிய நாட்டிலிருந்து வந்து இப்படி அநாகரிகமாக நடந்துகொள்கிறீர்களே?” என ஆவேசமாகக் கண்டித்தார். பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மன்னிப்புக் கேட்ட போதிலும், அந்த இளைஞர் விடாப்பிடியாக அவர்கள் துப்பிய இடத்தை அவர்களையே சுத்தம் செய்ய வலியுறுத்தினார்.
இதனால் வேறு வழியின்றி அந்த இந்திய பயணிகள் தண்ணீர் ஊற்றி சாலையைச் சுத்தம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஒரு சிலரின் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் வெளிநாடுகளில் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக நெட்டிசன்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற அந்த இளைஞரின் துணிச்சலான செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
