திருமணமான சில நாட்களிலேயே கணவனின் உயிருக்கு ஆபத்தான நோய் மற்றும் முதல் திருமண விவகாரம் தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த பெண், தனது மாமனார் வீட்டினர் சிறுநீரகத்தை கேட்டு மிரட்டுவதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கான்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்குத் திருமணம் முடிந்த நிலையில், தனது கணவரின் நடத்தை விசித்திரமாக இருப்பதை அவர் கவனித்துள்ளார். அவர் ஒருமுறை மட்டுமே உடலுறவு கொண்ட நிலையில் அதன்பிறகு தன்னிடம் நெருங்கி வருவதைத் தவிர்ப்பதைக் கண்டு சந்தேகமடைந்த அந்தப் பெண், ஒருநாள் வீட்டில் இருந்த மருத்துவக் கோப்புகளை (Medical Files) தற்செயலாகப் பார்த்துள்ளார்.
அப்போதுதான், தனது கணவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதும், அவர் ரகசியமாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதும் அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்தது. இந்த உண்மை கணவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்திருந்தும், திட்டமிட்டுத் தன்னிடம் மறைக்கப்பட்டதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
நோய் பாதிப்பை மறைத்தது குறித்து அந்தப் பெண் தட்டிக்கேட்டபோது, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது உண்மை முகத்தைக் காட்டியுள்ளனர். “எனக்கு உனது ஒரு சிறுநீரகத்தையாவது கொடு, இல்லையென்றால் உனது தந்தையிடம் இருந்து ரூ. 20 லட்சம் வாங்கி வா. அந்தப் பணத்தைக் கொண்டு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்,” என அவரது கணவர் மிரட்டியுள்ளார்.
சிறுநீரகம் அல்லது பணம் கொடுத்தால் மட்டுமே அவரை அந்தப் பெண் விடுவிப்பதாகவும், அதன் பிறகு அவர் வேறு திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அந்த நபர் பேரம் பேசியதாகப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அந்தப் பெண் மேலும் விசாரணை செய்தபோது, தனது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி, வாரணாசியில் முதல் மனைவி மற்றும் ஒரு மகள் இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. சிறுநீரகத்தைப் பறிப்பதற்காகவோ அல்லது பணத்தைப் பறிப்பதற்காகவோ திட்டமிட்டே தன்னை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளதாக அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
தொடக்கத்தில் குடும்ப நல ஆலோசனை மையம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், தற்போது கான்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பை மறைத்தது மற்றும் சித்ரவதை செய்தது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்,” என போலீசார் தெரிவித்துள்ளனர்.
