பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் சிவாஜி நகர் பகுதியில் அமைந்துள்ள போரஜ் கிராமத்தில் ராமநவமி திருவிழாக் கொண்டாட்டத்தின் போது பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. தில்லியில் பாதுகாவலராகப் பணியாற்றும் சுதர்சன் ஜா என்பவர், தனது மூன்று மகன்களான ஆதித்ய குமார், ஹர்ஷ்நாத் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் ஊர் திருவிழாவில் பங்கேற்க வந்திருந்தார்.
அங்குள்ள அனுமன் கோயிலில் வழிபாடு முடிந்த பிறகு, கரயே ஆற்றில் குளிப்பதற்காகச் சென்ற மூன்று சகோதரர்களும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர். ஒருவர் ஒருவரை காப்பாற்ற முயன்ற போது ஆழமான பகுதிக்குச் சென்று மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தலைநகர் தில்லிக்குத் திரும்ப முன்பதிவு செய்திருந்த நிலையில், மூன்று பிள்ளைகளையும் ஒரே நேரத்தில் இழந்த அந்தப் பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர்.
காவல்துறையினரின் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட சிறுவர்களின் உடல்கள், கரயே ஆற்றின் கரையில் ஒரே வரிசையில் தகனம் செய்யப்பட்டன. பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த அந்தப் பெற்றோரால் இறுதிச் சடங்கிற்கான செலவைக் கூட ஏற்க முடியாத சூழல் நிலவியது.
இதனைக் கண்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டி அந்தச் சிறுவர்களின் இறுதிப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். தாத்தா மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் அந்தப் பிஞ்சுகளுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்த காட்சி அங்கிருந்த அனைவரையும் உருக வைத்தது.
ஒரே குடும்பத்தின் மூன்று வாரிசுகளும் ஒன்றாக மறைந்த இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
