அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலில் பாகிஸ்தான் திடீரென மத்தியஸ்தராக உருவெடுத்ததன் பின்னணியில் மிகப்பெரிய ‘பொருளாதார டீல்’ இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூயார்க்கில் பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான ‘ரூஸ்வெல்ட் ஹோட்டலை’ மறுவடிவமைப்பு செய்யும் ஒப்பந்தத்திற்கும், இந்த ராஜதந்திர முயற்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

டொனால்ட் டிரம்பிற்கு நெருக்கமான தொழிலதிபர் ஸ்டீவ் விட்காஃப் மூலம், பாகிஸ்தான் இந்த ஹோட்டல் விவகாரத்தில் லாபம் ஈட்டவும், அதே சமயம் அமெரிக்காவின் அரசியல் செல்வாக்கைப் பெறவும் காய் நகர்த்தி வருகிறது. இது வெறும் அமைதிக்கான முயற்சி மட்டுமல்ல, ஒரு ‘பிசினஸ் டீல்’ என்று சர்வதேச அளவில் பேசப்படுகிறது.

இந்த ரகசியப் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீரின் பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தனிப்பட்ட முதலீடுகள், ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி போன்ற மறைமுக நிதிக் கருவிகள் மூலமாக டிரம்பின் நெருங்கிய வட்டாரத்துடன் பாகிஸ்தான் உறவை பலப்படுத்தியுள்ளது.

வழக்கமான தூதரக வழிகளைத் தவிர்த்துவிட்டு, தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் பொருளாதாரப் பேரங்கள் மூலம் அமெரிக்காவுடன் நெருக்கமாவதே பாகிஸ்தானின் திட்டம். இதன் மூலம் ராஜதந்திரமும் வணிகமும் ஒன்றாகக் கலந்து, ஒரு புதிய ‘ஒப்பந்த ராஜதந்திரத்தை’ பாகிஸ்தான் அரங்கேற்றி வருகிறது.