உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில், ஏகதா சவுத்ரி என்ற ஆசிரியை தனது கணவர் ராகுலால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு கணவன்-மனைவி இருவரும் நெருக்கமாக இருந்த சமயத்தில், போதைக்கு அடிமையான ராகுல் ஆத்திரத்தில் ஏகதாவின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தனது 5 வயது மகனுடன் தப்பியோடிவிட்டார்.
பால் விற்பனையாளர் வீட்டிற்கு வந்தபோதுதான் ஆசிரியை நிர்வாண நிலையில் பிணமாகக் கிடந்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ராகுலை மீரட்டில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், ராகுல் எந்த வேலைக்கும் செல்லாமல் மனைவியின் வருமானத்தில் வாழ்ந்து வந்ததும், அவரிடம் தொடர்ந்து பணம் மற்றும் கார் கேட்டு வரதட்சணை கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது. போதை பழக்கத்திற்காக ஏற்கனவே இரண்டு முறை ராகுல் சிகிச்சை பெற்றிருந்த நிலையில், இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார்.
தற்போது ராகுல் மீது வரதட்சணைக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது சகோதரர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்து ராகுலைச் சிறையில் அடைத்துள்ளனர்.
