மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சவூதி அரேபியாவையும் பஹ்ரைன் நாட்டையும் இணைக்கும் முக்கிய வழித்தடமான ‘கிங் ஃபஹத் காஸ்வே’ (King Fahd Causeway) பாலம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
ஈரானிடமிருந்து எந்த நேரத்திலும் தாக்குதல் வரலாம் என்ற அச்சம் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சவூதியின் கிழக்கு மாகாணத்தை குறிவைத்து ஈரானின் ஏவுகணைகள் அல்லது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, போக்குவரத்தை நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது கடுமையான பொருளாதார மற்றும் ராணுவ எச்சரிக்கைகளை விடுத்து வரும் சூழலில், பஹ்ரைன் போன்ற அண்டை நாடுகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரே நிலவழிப் பாதை இது என்பதால், பாலத்தின் மூடல் சரக்கு போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பயணத்தை முற்றிலும் முடக்கியுள்ளது. இரவு நேரங்களில் தாக்குதல் அபாயம் அதிகம் இருப்பதால், பாதுகாப்புப் படையினர் எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
