தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாளை திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பிரம்மாண்டப் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்துப் பேசும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தை முன்னிட்டு காவல்துறையினர் 51 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர். பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் வசதிக்காக குடிநீர், ஆம்புலன்ஸ் போன்ற அடிப்படை வசதிகளை அக்கட்சியின் மாநில நிர்வாகக்குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் பாளையங்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு, விஜய் அவர்கள் தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணாரப்பேட்டை மற்றும் நீதிமன்றச் சாலை வழியாக கே.டி.சி நகர் வரை வாகனப் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
மேலும் கடந்த சில தினங்களாகச் சென்னை மற்றும் இதர பகுதிகளில் நிபந்தனைகள் காரணமாகப் பரப்புரைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நெல்லையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி இந்த ரோடு ஷோ நடத்தப்படும் என்றும், அங்கிருந்து அவர் கார் மூலம் தூத்துக்குடி செல்லவிருப்பதாகவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
