தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், அக்கட்சியின் முதன்மை வேட்பாளருமான விஜய் தாக்கல் செய்த இரண்டு வேட்புமனுக்களும் முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இன்று நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையின் போது, இரண்டு தொகுதிகளிலும் அவர் தாக்கல் செய்த மனுக்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தன.
இதையடுத்து, அவரது மனுக்கள் செல்லுபடியாகும் என அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே விஜய் தனது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். தற்போது மனுக்கள் ஏற்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த இரண்டு தொகுதிகளிலும் நேரடியாகப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்தி வெளியானதும், சென்னை மற்றும் திருச்சி பகுதிகளில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். கட்சி அலுவலகங்கள் முன்பாகத் திரண்ட தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் இதே போன்று கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கலும் ஏற்கப்பட்டுள்ள நிலையில் திமுகவினரும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
