வயது வித்தியாசம் மற்றும் விருப்பமில்லாத திருமணத்தை காரணம் காட்டி, 19 வயது இளம்பெண் தனது காதலனுடன் இணைந்து வாழ மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கும், 40 வயது நபருக்கும் கடந்த சில காலங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 21 வயது வித்தியாசம் கொண்ட இந்தத் திருமணத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று அந்தப் பெண் கூறி வந்துள்ளார். இந்நிலையில், அந்தப் பெண் தனது வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்றுள்ளார்.

இதனையடுத்து, தனது மனைவியை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக அந்த 40 வயது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அந்த இளம்பெண் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“எனக்கும் எனது கணவருக்கும் இடையே 21 வயது வித்தியாசம் உள்ளது. இந்தத் திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை. நான் எனது விருப்பப்படியே காதலனுடன் சென்றேன். அவருடனேயே வாழ்வதற்கும் விரும்புகிறேன் என்றார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு பெண் ‘மேஜர்’ (வயது வந்தவர்) ஆகிவிட்டால், தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமை அவருக்கு உண்டு என்று சுட்டிக்காட்டினர்.

“ஒருவர் யாருடன் வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அவருக்கு முழு சுதந்திரம் உள்ளது. இதில் மற்றவர்கள் தலையிட முடியாது” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அந்தப் பெண் தனது காதலனுடன் செல்வதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். மேலும் கணவர் தொடர்ந்த கடத்தல் புகாரையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.