பீகார் மாநிலம் மோதிப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி மகேஷ்வர் பண்டிட் என்ற பாத்திர வியாபாரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சந்தையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவரை மர்ம கும்பல் தலையில் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மகேஷ்வர் பண்டிட்டின் கொலையில் அவரது மனைவிக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைத் தீர்த்துக்கட்ட அவர் தனது காதலன் மற்றும் உறவினருடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி இந்தக் கொலையைச் செய்துள்ளார்.
12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான மகேஷ்வர் பண்டிட்டிற்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அவரது மனைவிக்கு அண்டை வீட்டைச் சேர்ந்த முன்னா பண்டிட் மற்றும் உறவினர் மகேஷ் பண்டிட் ஆகியோருடன் முறையற்ற தொடர்பு இருந்துள்ளது.
இதனை நேரில் பார்த்து கண்டித்த மகேஷ்வர் பண்டிட் தனது மனைவியின் காதலன் வீட்டிற்கே சென்று எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதல் ஜோடி அவருக்குக் குறிவைத்து கூலிப்படை மூலம் இந்தக் கொலையை அரங்கேற்றியுள்ளனர். தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள கூலிப்படை கொலையாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
