அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தேவையற்ற வதந்திகளுக்கு வெள்ளை மாளிகை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதிபர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கூகுள் உள்ளிட்ட இணைய தேடுபொறிகளில் “ட்ரம்ப் மரணம்” (Trump dead) என்ற வாசகம் அதிகப்படியாகத் தேடப்பட்டு வருகிறது. ஈஸ்டர் வார விடுமுறை நாட்களில் அதிபர் ட்ரம்ப் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார் என்று வெள்ளை மாளிகை அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தச் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது. வழக்கமாகப் பொது நிகழ்ச்சிகளிலும், தனது மார்-ஏ-லாகோ இல்லத்திலும் சுறுசுறுப்பாகக் காணப்படும் ட்ரம்ப், திடீரென ஓய்வெடுப்பது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் கூறியதாவது, அதிபர் ட்ரம்ப்பின் உடல்நிலை குறித்து பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. அவர் ஈஸ்டர் விடுமுறை காலத்திலும் தனது அலுவலகப் பணிகளைத் தொய்வின்றி கவனித்து வருகிறார். அவருக்கு எவ்வித மருத்துவ அவசரமும் ஏற்படவில்லை. வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

கடந்த மார்ச் மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது, ட்ரம்ப்பின் கழுத்து மற்றும் கைகளில் சில தழும்புகள் மற்றும் நிறமாற்றம் காணப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அப்போதே அவரது உடல்நிலை குறித்துப் பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால், அது சாதாரண தோல் சிகிச்சை என்றும், விரைவில் மறைந்துவிடும் என்றும் வெள்ளை மாளிகை விளக்கம் அளித்திருந்தது. தற்போது அவர் பொது வெளியில் தோன்றாததால், பழைய புகைப்படங்களையும் இதையும் இணைத்துச் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

ட்ரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சில உறுதிப்படுத்தப்படாத வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஆனால், நிர்வாகத் தரப்பில்  எதுவும் உறுதி செய்யப்படவில்லை. சமூக வலைதளங்களின் வேகமான பரவல் காரணமாக, ஒரு சிறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட மிகப்பெரிய வதந்தியாக உருவெடுத்துள்ளதை இந்தச் சம்பவம் காட்டுகிறது. மேலும் தற்போது வரை அதிபரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் தனது வழக்கமான பணிகளில் தீவிரமாக இருப்பதாகவும் அமெரிக்க அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.