மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில், 8 வயது சிறுமி மைராபி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்றிரவு தனது தாய்க்கு அருகிலேயே தூங்கிக்கொண்டிருந்த சிறுமி, அதிகாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு தாய் உறைந்து போனார்.

மேலும் தூக்கத்தில் தாய் புரண்டு படுத்தபோது தன் மகளின் அசைவற்ற உடலையும் அங்கிருந்த ரத்தக் கறைகளையும் கவனித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.

இந்த மர்ம மரணம் குறித்து பிம்ப்ரி-சிஞ்ச்வாட் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பகட்ட தகவல்களின்படி, சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததாகக் கூறப்படுவதால், இது கொலையா அல்லது எதிர்பாராத விபத்தா என்ற கோணத்தில் போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

இந்நிலையில் சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது, அதன் அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும். பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை விலக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.