ஹரியானா மாநிலம் கர்னால் அரசு மருத்துவமனையில், 74 வயது முதியவர் ஒருவரின் மூக்கிலிருந்து மருத்துவர்கள் மிக அரிதான முறையில் கற்களை அகற்றி சாதனை படைத்துள்ளனர். ரண் சிங் என்ற அந்த முதியவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மூக்கடைப்பால் மிகுந்த சிரமப்பட்டு வந்துள்ளார். ஆரம்பத்தில் இதைச் சாதாரணச் சளியோ அல்லது ஆஸ்துமாவோ என்று நினைத்து மருந்து எடுத்து வந்தவருக்கு, ஒருகட்டத்தில் மூச்சு விடுவதே கடினமாகியுள்ளது.

பின்னர் மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது, மூக்கிலிருந்து தொண்டை வரை கற்கள் அடைத்திருப்பது தெரியவந்தது. இது மருத்துவர்களையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ​முதியவர் ஒரு இதய நோயாளி என்பதால், அவருக்கு மயக்க மருந்து (General Anesthesia) கொடுப்பது ஆபத்தானது என மருத்துவர்கள் கருதினர். இதனால், இ.என்.டி நிபுணர் டாக்டர் ஜெயவர்த்தன், மிகுந்த எச்சரிக்கையுடன் ‘லோக்கல் அனஸ்தீசியா’ மூலம் இந்த சவாலான அறுவை சிகிச்சையைச் செய்யத் துணிந்தார்.

வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த சிகிச்சையில், 2.8 மி.மீ, 5.8 மி.மீ மற்றும் 9 மி.மீ அளவிலான கற்கள் அகற்றப்பட்டன. நீண்ட காலத்திற்குத் தூசு மற்றும் மாசு நிறைந்த சூழலில் வேலை செய்பவர்களுக்கு, மூக்கிற்குள் நுழையும் துகள்கள் படிந்து இப்படிப்பட்ட கற்களாக மாற வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது ரண் சிங் பூரண குணமடைந்து நிம்மதியாக மூச்சு விடுகிறார்.