அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது வார இறுதி விடுமுறையை ரத்து செய்துவிட்டு, பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

வழக்கமாக வார இறுதி நாட்களில் ஓய்வெடுக்கும் அதிபர் ட்ரம்ப், தற்போது அந்த விடுமுறையை ரத்து செய்துவிட்டு வெள்ளை மாளிகையிலேயே முகாமிட்டுள்ளார். அங்கு உயர்நிலை ராணுவ அதிகாரிகளுடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். ஈரானின் அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்கான ராணுவ வியூகங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டங்களில் விவாதிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக  ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டாக 1.5 டிரில்லியன் டாலர் (சுமார் 125 லட்சம் கோடி ரூபாய்) ஒதுக்கீடு செய்யக் கோரப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 42 சதவீதம் அதிகமாகும். 1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்க ராணுவ பட்ஜெட்டில் செய்யப்படும் மிகப்பெரிய உயர்வு இதுவேயாகும்.

ராணுவச் செலவுகளை ஈடுகட்ட, மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் 73 பில்லியன் டாலர் (சுமார் 10 சதவீதம்) வரை குறைக்க ட்ரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. தேவையற்ற அரசுத் திட்டங்களைக் கைவிட்டு, அந்தப் பொறுப்புகளை அந்தந்த மாகாண அரசுகளிடமே ஒப்படைக்க அதிபர் திட்டமிட்டுள்ளார். மேலும்  அமெரிக்காவின் இந்த அதிரடி ராணுவ முன்னேற்பாடுகள் மற்றும் பட்ஜெட் உயர்வு, அந்நாடு ஒரு மிகப்பெரிய போருக்குத் தயாராகி வருவதையே காட்டுவதாக உலக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த பட்ஜெட் தொடர்பான விவாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ளது.