மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில், 5 மாணவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நாசிக் மாவட்டம் திண்டோரி பகுதியில் உள்ள இந்தோரே கிராமத்தைச் சேர்ந்த தர்கோடே குடும்பத்தினர், அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனியார் பயிற்சி மையத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காகத் தங்களது காரில் சென்றிருந்தனர். விழா முடிந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
மண்டபத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த விவசாயக் கிணற்றுக்குள் தலைகுப்புறப் பாய்ந்தது. அண்மையில் பெய்த மழையினால் அந்தக் கிணறு முழுவதுமாக நீரால் நிரம்பியிருந்தது.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் உள்ளூர் நிர்வாகம், தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்தனர். எனினும், இரவு நேரம் என்பதாலும், கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததாலும் மீட்புப் பணியில் கடும் சவால்கள் ஏற்பட்டன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, கிரேன் உதவியுடன் கார் மற்றும் 9 பேரின் உடல்களும் வெளியே எடுக்கப்பட்டன.
இந்த விபத்தில் சுனில் தத்தாத்ரேய தர்கோடே (35), ரேஷ்மா சுனில் தர்கோடே (33), ராக்கி, ஆஷா, மாதுரி மற்றும் ஸ்ராவணி ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களுடன் 7 முதல் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களான சிருஷ்டி (16), ஸ்ரேயாஸ் (11) மற்றும் சம்ருதி (7) ஆகியோரும் உயிரிழந்தது கிராம மக்களைப் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மகிழ்ச்சியான விழாவிற்குச் சென்று திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
