கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் இளம்பெண்களை நட்பின் பெயரால் ஏமாற்றி, அவர்களைத் தாக்கி மிரட்டி வந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவரின் செயல் அம்பலமாகியுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹூப்பள்ளியைச் சேர்ந்த சமீர் முல்லா என்பவர் ஜிம் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் அங்கு வரும் இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி வலையில் வீழ்த்துவதாகவும், பின்னர் அவர்களைத் தாக்கி, மிரட்டி பிளாக்மெயில் செய்வதாகவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு சமீரின் உண்மை முகத்தைத் தோலுரித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சமீரை கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து கருத்தடை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. இது இந்த வழக்கின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளது.  இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை சமீரின் சகோதரி தைய்ஸீம் முல்லா முற்றிலுமாக மறுத்துள்ளார். “எனது சகோதரனுக்கு வெறும் 24 வயது தான் ஆகிறது. அவர் ஏன் இது போன்ற பொருட்களை வைத்திருக்கப் போகிறார்? அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை” என்று அவர் பேசியுள்ளார்.

சமீரின் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ ஆதாரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, நகரின் விஜயநகர் மற்றும் விகாஸ் நகர் பகுதிகளில் மக்கள் திரண்டதால் பதற்றம் நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. “இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.